'ஊருக்கை ஒருகதை" - 'யானை திரத்தின கூளைக் கணபதி"

யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் 'தீம்புனல்" வாரந்த பத்திரிகையில் 'ஊருக்கை ஒருகதை" எனும் தலைப்பில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் ஊர்க்கதைகளில் 22.05.2021 அன்றைய நாளில் வெளியான 'யானை திரத்தின கூளைக் கணபதி".   


'ஊருக்கை ஒருகதை" - 'யானை திரத்தின கூளைக் கணபதி"


உங்களுக்கும் தெரியும்தானே வேலையில்லாமல் இருக்கிற ஆக்களுக்கு காணித்துண்டு குடுக்கினமாம். இளம் பொடியள், பெட்டையள் எல்லாரையும் கூப்பிட்டு 'இன்ரர்வியூ" வைக்கினமாம். காடுகளைத் திருத்தி களனியளாக்கப் போயினமாம். பாவனையற்றுக் கிடக்கிற காணிகளிலை முதலீட்டைக் கூட்டி நாட்டிலை தொழில்வாய்ப்புகளை பெருக்கப் போயினமாம். உந்த வேலை ஏன் நடக்குதெண்டு மற்றப்பக்கத்திலை வேறை கதையளும் இருக்கு! காகத்தின்ரை கூட்டுக்குள்ளை குயில் முட்டையிடுறதை சட்டரீதியாக்கினால் காகம் குயிலைத் திரத்திக் குட்டேலாதுதானே! அதுக்குப்பிறகு காகத்துக்கும் குயிலுக்குமிடையிலை நல்லிணக்கம் வந்திடும் எண்ட கதையளும் இருக்குத் தெரியுமோ? 

உந்தக் காணித்துண்டுகள் குடுக்கிற நாடகம் நடக்கிற நேரத்திலை அடிக்கடி 'யானை திரத்தின கூளைக் கணபதி"யின்ரை ஞாபகம் வந்துபோகுது. கணபதியை ஊரிலை எல்லாரும் 'கூளைக் கணபதி" எண்டுதான் சொல்லி வந்தினம். கட்டையாயிருக்கிறது, நீளம் குறைந்தது எல்லாத்தையும் 'கூளை" எண்டுதான் சொல்லுவினம். கூளை எண்டால் குட்டை. கணபதி குட்டையான ஆள். அதுதான் அவரை கூளைக் கணபதி எண்டு சொல்லிவந்தினம்.

கூளைக் கணபதிக்கு முன்னாலை 'யானை திரத்தின" அடைமொழியா வந்ததுக்குப் பின்னாலை ஒரு கதையிருக்கு. அதைத்தான் சொல்லப்போறன் கேளுங்கோ. 

கூளைக் கணபதியார் நல்ல ஒரு விவசாயி. விவசாய மன்னன் பட்டம் குடுத்தவையாம்! எப்ப பார்த்தாலும் மண்வெட்டியும் கையும்தான். மற்றவையைப் போல நித்திரையாலை எழும்பி குளிச்சு வேலைக்கு வெளிக்கிடுற ஆளில்லை அவர். நித்திரைக்குப் போகேக்கை குளிச்சு படுக்கிற ஆள். அதை நினைச்சு பெருமையும் இருக்கு ஆளுக்கு. 'எனக்கு நான்தாண்டா முதலாளி" எண்டு பெருமையடிப்பார். 'வெங்காயம் வித்துக் கட்டின வீடு, புகையிலை வித்துக் கட்டின மதில்" எண்டு தன்ரை உழைப்பின்ரை பெருமையை வாயை உறிஞ்சி உறிஞ்சிக் கதைப்பார். முந்தியேல் காலத்திலை வெள்ளை ரிசுவிலை சுத்தி வித்த 'புளுட்டோ" ரொபிக்கு கை, கால் முளைச்சால் கூளைக் கணபதியார் போலத்தான் இருக்கும் எண்டு கற்பனை வளம் உள்ளவை அவரை நக்கல் பண்ணுவினம். அவருக்கு அதைப்பற்றி எந்தக் கவலையும் கிடையாது. 'கடுகு சிறிசெண்டாலும் காரம் பெரிசெடா" எண்டு சொல்லிக் கொண்டு சாரத்தை தூக்கிச் சண்டிக்கட்டுக் கட்டுவார்.

விவசாய மன்னன் கணபதியை அவர் தோட்டத்துக்கை வேலைசெய்துகொண்டு நிக்கையுக்கை ஒருக்கால் ஆரோ 'நீயூஸ் பேப்பர்"காரர் வந்து 'போட்டே" எடுத்தவையாம். அதைப் பிறகு ஏதோ ஒரு விவசாயம் சம்பந்தப்பட்ட பேப்பரிலை போட்டவையாம். அப்பிடித்தான் பிறகு ஒருக்கால் ஜே.ஆர்.ஜேவர்த்தனாவையும் மண்வெட்டி பிடிச்சு வயலுக்குள்ளை வேலை செய்யிறதுமாதிரி ஏதோ ஒரு சஞ்சிகையின்ரை அட்டைப் படத்திலை போட்டவையாம்! நையாண்டியாத்தான் போட்டிருப்பினம்போலை. கணபதியார் தன்ரை வீட்டு ஹோலுக்குள்ளை தன்ரை படத்தையும் ஜே.ஆரின்ரை படத்தையும் பக்கத்திலை பக்கத்திலை ஒட்டிவைச்சு பெருமை அடிப்பாராம். 'நாட்டின்ரை மன்னனும் விவசாய மன்னனும் தோட்டத்திலை" எண்டு சொல்லிச் சிரிப்பாராம்! அவருக்கு எங்கை தெரியும் திறந்த பொருளாதாரத்தின்ரை தந்தையார் அவர்தான் எண்டது.

பொருளாதாரத்தை திறந்துவிட முன்னமும் ஒருக்கால் வன்னிப் பகுதியிலை இளம் ஆக்களுக்கு காணித்துண்டுகள் குடுத்தவையாம். படிச்ச வாலிபர் திட்டமாம். அந்த நேரத்திலை இருந்த வாலிபர்களுக்கு காணியள் தாராளமாக கிடைச்சுதாம். வன்னியிலை இருந்த காணியளை வளமாக்கி விவசாயம் செய்யவைச்சு உள்நாட்டிலை விவசாய உற்பத்தியை முன்னேற்ற அதைச் செய்தினமாம். வாலிபரில்லாத பலருக்கும் அந்தக் காணியளை பாத்தும் பாராமலும் குடுத்திருக்கினம். இண்டைக்கு வன்னியிலை நிரந்தரமா இருக்கிற வன்னி வாசியள் பலபேர் அந்தத் திட்டத்தோடை அங்கை போய்த்தானாமே நிலச்சுவாந்தரா இருக்கினமாம்! அந்த நிலச்சுவாந்தருகளின்ரை தோப்புகளிலையும் வயலுகளிலையும் வேலைசெய்ய கூலியாட்களுக்கு குறைவில்லாமல், பிறகு வந்து குடியேறின சனங்களின்ரை கதை இன்னொண்டு.

கூளையருக்கும் அந்தத் திட்டத்திலை காணி கிடைச்சிருந்துதாம். 'வெளிக்கிடடி முத்தையன்கட்டுக்கு" எண்டு கணபதியார் வெளிக்கிட்டுப் போனாராம். 'வெளிக்கிடடி விசுவமடுவுக்கு" என்றது தான் ஒறிஜினல்! வன்னியிலை முத்தையன்கட்டுப் பக்கம்தானாம் அவற்றை காணி. ரண்டு போகம் பயிர்செய்யக்கூடியது. விசாலமான காணி. காணியில் நடுக்கொள்ள சின்னளவில் ஒரு வீட்டை போட்டுக்கொண்டு, சுற்றிவர தென்னையள் வைச்சு, பயிரையும் வைச்சு மனிசன் கடுமையா உழைச்சிருக்கிறார். ஊரிலையுள்ள தோட்டம் துரவுகளை பாத்துக்கொண்டே கிழமைக்கு ஒருக்கால் முத்தையன்கட்டுக்கு போய் வந்தாராம். அங்கை வேலைக்கு ஆட்களை வைச்சிருந்தாராம். கிழமைக்கு ஒருக்கால் போனால் ஆகக்கூடினது ரண்டு நாள் நிண்டு வருவாராம். நிக்கிற நேரத்திலை வேலையாட்கள் மான், மரை, பண்டி எண்டு விதவிதமான அயிற்றங்களோடு வருவாங்களாம். விருந்து அமர்க்களமாயிருக்குமாம். கொஞ்சம் கீறிக்கொண்டாரேயெண்டால் காட்டுப்பக்கம் 'மோகினிப் பிசாசு" பார்க்கவும் போய் வருவாராம்! 

அப்பிடித்தானாம் ஒருக்கால் கூளையர் காணிபார்க்க போயிருக்கிறார். இரவு நல்ல கவனிப்புக் கவனிச்சுவிட்டாங்களாம் வேலையாட்கள். அது விளைச்சல் காலமாம். பயிருகளிலை பண்டி விழுறது, யானையள் விழுறது அந்தக் காலத்திலைதானாம். கூளையர் சீறுபூறெண்டு நித்திரையாம். கீறடிச்சுப்போட்டுப் படுத்தவர் இடிவிழுந்தாலும் தெரியாதளவுக்கு நித்திரை. அந்த நேரம் பார்த்து பயிருக்குள்ளை யானை ஒண்டு தன்ரை இஸ்டத்துக்கு பூந்திட்டுதாம். நெருப்புப் பந்தங்களைக் விசுக்கி வேலையாட்கள் யானையைத் திரத்தத் தொடங்கினாங்களாம். வேலையாட்கள் கத்துற சத்தத்தைக் கேட்டு நித்திரைத் தியரோடை எழும்பின கூளையர் பதறியடிச்சுக்கொண்டு வெளியிலை ஓடியிருக்கிறார். திசை தெரியாமல் ஓடின கூளையர் யானைக்கு கிட்டையே போயிருக்கிறார். யானை அவரைத் திரத்தத் தொடங்கியிருக்கு கூளையர் 'ஐந்துகரத்தனை ஆனைமுகத்தனை" எண்டு பாடிக்கொண்டே மரண பயத்திலை இடம், பக்கம் தெரியாமல் ஒடினராம். அந்த இருட்டுக்குள்ளை திக்குத்தெரியாமல் ஒடினவர் இருட்டுக்கை இருட்டா எங்கை மறைஞ்சாரெண்டு தெரியாமல் வேலையாக்கள் ரண்டு மூண்டு நாளா தேடி அலைஞ்சாங்களாம். முதலாளியை மோகினி கொண்டு போயிருக்கும் எண்டு நினைச்சாங்களாம். நாலஞ்சு நாளிலை தேடுறதை நிப்பாட்டிப்போட்டினமாம். 

வீட்டுக்குச் செய்தி சொல்லவெண்டு ரண்டு வேலையாக்கள் வெளிக்கிட்டு கூளையரின்ரை ஊருக்கு வந்திருக்கிறாங்கள். வீட்டுக்கே வந்திட்டாங்களாம். அந்த நேரம்பார்த்து தோளிலை மண்வெட்டியை காவிக்கொண்டு கூளையரும் அங்கை வந்திருக்கிறார். கூளையரைக் கண்டுவிட்டு அவங்கள் திகைச்சுப்போனாங்களாம். கூளையர் சாமாளிச்சிட்டாராம். நிலைமை விளங்கீட்டுது அவங்களுக்கு. நிலச்சுவாந்தர் ஒருவரை அந்த இரவு விழுங்கிவிட்டதை அவங்களைத்தவிர ஆர் அறிவினம்? 


Comments

Popular posts from this blog

ஊருக்கை ஒருகதை - சவம் காத்த சண்டியன் சண்முகத்தான்