கிராமத்து மனிதர்கள் என்ற இந்தத் தொடர் தனித்துவமான கிராமத்து மனிதர்களை மீள நினைவுபடுத்துவதன் மூலமாக அருகிப்போன கிராமத்து வாழ்வின் செழுமைகளையும் விகற்பங்களையும் வெளிக்கொண்டுவருகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் 'உதயன்" நாளிதழின் வாராந்த வெளியீடான 'சஞ்சீவி"யில் தொடர்ச்சியாக 20 வாரங்கள் 'கிராமத்து மனிதர்கள்" எனும் தலைப்புடன் வெளியான கதைகள் இங்கு மீள்பதிவாகின்றன. 'இராகன்" எனும் புனைபெயரில் இவை பத்திரிகையில் எழுதப்பட்டவை. 


கிராமத்து மனிதர்கள்.... 

பெண்டுகள் கந்தியான் கந்தவனம்




                                                                                                                                       'இராகன்"


காலம் தப்பிய மழை வரும் காலங்களிலெல்லாம் 'பெண்டுகள் கந்தியானை"த்தான் நினைவுகளில் மீட்டுக்கொள்வார்கள் எம் ஊரவர்கள். வயல்கள் விளைந்து நிறைமாதக் கர்ப்பிணியாய் கொத்துக்கொத்தான கதிர்களைத் தாங்கிச்சுமந்து அசைந்து நிற்கும்போது எப்போதாவது எதிர்பாரத விதமாக காலந்தப்பிய மழைமேகம் வழிப்பறிக் கொள்ளையர்போல திடீரென வந்து சூழும் தருணங்களில் பெண்டுகள் கந்தியான் வயல் வெளிக்கு வந்துவிடுவார். 

பரந்துகிடக்கும் வயலின் நாலாபுறமும் புதிதாய் வரவழைத்த பக்குவத்தோடு நடப்பார். கையில் ஒரு தேங்காய் அதன்மேல் ஏற்றிவைக்கப்பட்ட சூடம். வலது கையில் சூடமேற்றிய தேங்காயைத் தாங்கி இடது கரத்தினால் எரிந்து கொண்டிருக்கும் சூடத்தின் சுவாலை காற்றில் அணைந்துவிடாது அணைத்துப் பிடித்தவாறு பச்சைக் கம்பள வயலில் குறுக்குமறுக்காகக் கிடக்கும் கிளித்தட்டுக் கோடுகளான வரம்புகளில் பக்திபூர்வமாக பவ்வியமாய் நடப்பார். எப்போதும் 'பரவச" நிலையிலிருக்கும் கந்தியானை அந்த வேளைகளில் காண்பவர்கள் தங்கள் கண்களை நம்பமுடியாமல் ஒரு முறை கசக்கிவிட்டுக்கொள்வார்கள். அவ்வளவு பவ்வியமான பக்தி. வரம்புகள் யாவற்றிலும் நடந்து முடிந்ததும் சூடமேற்றிய தேங்காயை இரண்டுகைகளாலும் தாங்கி தலைக்குமேல் உயர்த்தி வானத்தை அண்ணார்ந்து பார்த்து வாயில் ஏதோ முணுமுணுப்பார். பின்னர் செல்வச் சந்நிதியான் இருக்கும் திசையைப் பார்த்து வேண்டுதல் செய்தபடி எரிந்துகொண்டிருக்கும் சூடம் அணைந்துவிடும்படி தேங்காயைச் சிதற அடிப்பார். அடித்துத் தலை நிமிரும் போது அவரது கண்கள் கசிந்திருக்கும். கண்ணூறுகள் போய்விட்டதாக பெருமூச்சுயிர்ப்பார். 

சூல்கொண்டு வந்த மேகம் சல்லடையாய் சூரியக் கதிர்களை பச்சை வயல்மீது வடியவிடும். கர்ப்பிணி கதிர்கள் காற்றில் மெல்ல அசையும். வயற்கரைக் குளத்தில் பட்டையில் தண்ணீர் மொண்டு தலையில் ஊற்றிக் கொண்டு கந்தியான் செல்வச் சந்நிதி நோக்கி நடக்கத் தொடங்குவார்.

இவ்வளவுக்கும் அந்தப் பரந்து கிடக்கும் பச்சை வயலின் ஒரு குழி நிலந்தன்னும் கந்தியானுக்குச் சொந்தமில்லை. அத்தனை வேண்டுதலும் பிறர் நலத்துக்கானது. சுயநலம் எதுவுமில்லா மனிதர்கள் அவர்கள். விதைப்பவன், விளைவிப்பவன், அறுப்பவன், உண்பவன் என்று அனைவரின் வாழ்வுக்குமான வேண்டுதல் அது. 

கந்தவனம் பெண்டுகள் கந்தியான் என்ற பட்டம் பெற்றது சுவாரசியமானது. எப்போதும் மடியில் கனக்கும் வெற்றிலைச் சரை அவரைச் சபைகளில் மையத்தில் திகழவைத்தது. வெற்றிலை போடும் பெண்கள் மத்தியில் அவர் ஒரு விநியோக மையம். தாம்பூலம் தரித்துவிட்டால் போதும் வார்த்தைகளில் ஒரு நளினம். பேச்சிலே ஒரு குழைவு. நடையிலே ஓர் அசைவு. ஊரில் நடக்கும் சபை சந்தியில் சமையல் பகுதியில் கந்தவனம் இல்லாத சபையே இல்லை எனலாம். சோற்றுக் கிடாரத்தில் நிற்றல், தேங்காய் துருவுதல், அடுப்பு வைத்தல் என்று சபைகளில் ஆண்களுக்கு எத்தனையோ வேலைகள் காத்துக்கிடக்க மரக்கறி வெட்டுதல், அரிசி கிளைதல், தேங்காய்ப்பால் பிளிதல் என்று நீளும் அவரது ஆர்வங்கள் யாவும் நீண்டகாலத்துக் கணிப்பில் அவரை பெண்டுகள் கந்தியானாக்கிவிட்டது.

இன்னொரு காரணமும் உண்டு. அது அந்தப் பிரதேசத்து உற்பத்தி முறைகளுடன் சம்பந்தப்பட்டது என்று அறிவுஜீவித்தனமாகக் கூறிவிடலாம். வயலில் அறுவடைக்காலம் வந்துவிட்டால் கந்தவனத்தார்தான் அதிகாரி. வயல் சொந்தக்காரன்கூட இரண்டாம் பட்சம்தான். இன்றைய பரிபாசையில் 'அவுட் சோசிங்" என்பார்களே! அவரும் ஓர் அவுட் சோசிங் கொம்பனிதான். அறுவடை செய்யவும், அறுத்தவற்றை ஒழுங்காக அடுக்கவும், அடுக்கியவற்றை அள்ளிக் கூட்டிக்கட்டி நெல்லடியல் செய்யும் இடத்துக்குக் தலையில் காவி நடக்கவும், அடித்த நெல்லைத் தூற்றவும், பொலிந்த நெல்லை அளந்து மூடை கட்டவும் கூலிக்காக வரும் பெண் தொழிலாளர்களுக்கு தலைச்சன் அவர்தான். தான் எப்போதுமே நெல்லடிப்பவர் என்ற பிரதான பதவியைத் தக்கவைத்துக்கொள்வார். 

பெண்களால் கொண்டுவந்து குவிக்கப்படும் அறுவடை செய்த 'உப்பட்டிகளை"(அறுவடைசெய்த நெல்மணிகளோடு கூடிய தாறு) தனினொருவராய் 'கடமானால்"(தும்பினால் அல்லது வைக்கோலால் திரித்த கயிறு) சுற்றி இறுக்கி விசுக்கி அடிக்கும் போது பொலியும் நெல்லில் ஒரு மணிதானும் விரிக்கப்பட்ட 'தறப்பாளிலிருந்து"(சாக்குகளால் பொருத்தித் தைக்கப்பட்ட நிலவிரிப்பு) விலகிப்போகாது பார்த்து கொண்டு 'பொலியை"(பொலிந்துவரும் நெற்குவியல்) பேணுவதும் அவ்வப்போது கூலிப்பெண்கள் இழைக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டித் தட்டிக்கேட்பதும் அந்தப் பெண்களின் மத்தியில் அவரைத் தன்னிகரில்லாத் தலைவனாக்கியிருந்தது. அவருக்கு தொழில் ஒழுக்கக் குலைவால் உண்டாகும் விசுவாமித்திரக் கோபத்துக்கு ஆளாகாது தப்பித்துக்கொள்ள கூலிப்பெண்கள் யாவரும் எடுக்கும் பிரயத்தனங்கள் பல. கோபம் மிகுந்துவிட்டால் அவர் பிரயோகிக்கும் தூசணை அஸ்திரங்கள் மராமரம் ஏள்துழைக்கும்.    

வயல் அறுவடையோடு தொடர்புடைய உபதொழில்கள் பலவற்றில் பெண்டுகள் கந்தியான் தன் வாழ்வையே இணைத்திருந்தார். குல்லம்(நெல் தூற்றும் சுளகு) இழைத்தல், தட்டுப்பெட்டி(அறுவடைப் படையல் செய்யும் தட்டையான அகலமான பனையோலைப் பெட்டி), தட்டுவம்(வயலில் படையலுக்காகவும் குழைசோறு சாப்பிடவும் பயன்படுத்தும் தட்டையான ஓலைப் பெட்டி) இழைத்தல், கடமான் பின்னுதல், படங்குப்பாய் பின்னுதல் முதலான வேலைகளைத் தனது வீட்டில்வைத்தே பின்னிச் சேகரித்து அறுவடைக்காலத்தில் விற்று, வரும் சிறிய வருமானத்தைத் தன் பிழைப்பூதியத்துக்காக சிறுகச் சிறுகச் சேர்த்துவைப்பார். தன்னோடு வயலில் வேலை செய்யும் பெண்களின் அவசிமான குடும்பத் தேவைகளுக்கு கடன் கொடுத்தும் உதவிசெய்வார். 

கந்தவனத்தார் தன்னுடைய தோற்பையுடன் புறப்பட்டுத் திரும்பிவரும்போது வாங்கிவரும் வாடிக்கையான இரண்டு போத்தல்கள் உள்ளே போனதன் பின்னான பொழுது 'ஆம்பிளைக் கந்தியானாக" உருவெடுக்கும் முதன்மையான தருணங்களில் ஒன்று. 'சின்னண்ணன் வீட்டுக் கள்ளு....." என்ற காத்தவராயன் கூத்துப் பாடலைப் பாடத்தொடங்கிவிட்டால் கந்தியானுக்குள் ஆண் புகுந்துவிட்டதை புரிந்துவிடலாம். ஆனால், வயலில் நெல்லடியலில் ஈடுபடும் நாட்களில் அன்றைய நாள் முழுவதிலும் தோற்பை தூக்காமலேயே அவருள் ஆண் புகுந்துவிடுவான். அவ்வளவு தொழில் கரிசனை - விசுவாசம். 

என்னதான் பெண்டுகள் கந்தியான் என்று பட்டப்பெயர் சொன்னாலும் கந்தவனத்தாரை பெருமைப்படுத்தியே ஊர் பேசியது. நாளாந்த வாழ்வை சரியாக நடத்துவதில் சிரமப்படும் பெண்களின் குடும்பங்களுக்காக வருமானம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள வைப்பதற்காக வயல் தொழிலில் தனக்குள்ள அனுபவத்தையும் அதிகாரத்தையும் அவர் பயன்படுத்துவதை எல்லோருமே வியந்து பேசிவந்தார்கள். பெண் தலைமைக் குடும்பங்களின் வாழ்வாதாரம் குறித்து வியக்கவைக்கும் திட்டங்கள் தீட்டப்படும் இன்றைய காலத்துக்கு கந்தவனத்தார் ஒரு படிப்பினையைத் தருகிறார் என்பதை என் அறிவு ஒத்துக்கொள்ளத் தயாராகிவிட்டது. 

உதயன்-சஞ்சீவி, 25.01.2020.  


Comments

Popular posts from this blog

'ஊருக்கை ஒருகதை" - 'யானை திரத்தின கூளைக் கணபதி"

ஊருக்கை ஒருகதை - சவம் காத்த சண்டியன் சண்முகத்தான்