கிராமத்து மனிதர்கள் என்ற இந்தத் தொடர் தனித்துவமான கிராமத்து மனிதர்களை மீள நினைவுபடுத்துவதன் மூலமாக அருகிப்போன கிராமத்து வாழ்வின் செழுமைகளையும் விகற்பங்களையும் வெளிக்கொண்டுவருகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் 'உதயன்" நாளிதழின் வாராந்த வெளியீடான 'சஞ்சீவி"யில் தொடர்ச்சியாக 20 வாரங்கள் 'கிராமத்து மனிதர்கள்" எனும் தலைப்புடன் வெளியான கதைகள் இங்கு மீள்பதிவாகின்றன. 'இராகன்" எனும் புனைபெயரில் இவை பத்திரிகையில் எழுதப்பட்டவை. 


கிராமத்து மனிதர்கள்.... 02

கலைநேசன் ஞானலிங்கம் 


                                                                                                                                       இராகன்

தூய்மையும் சீர்மையும் மனிதவாழ்வின் வனப்புக்கு இன்றியமையாதது. மனிதர்கள் முதலில் தங்கள் ஒவ்வொருவரின் சீர்மையையும் உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள். வீட்டில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாது யாரும் இருப்பதில்லை. அது அத்தியாவசியங்களில் ஒன்று. சிலரது வீடுகளில் வீட்டுக்குள்ளே அலங்கரிக்கும் தேவைக்காக ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியும், வெளியே கூடுதல் வெளிச்சம் உள்ள இடத்தில் சவரம் செய்வதற்கு இன்னொரு கண்ணாடியும் இருக்கும். வீட்டு வேலைகள் ஓய்ந்த பின்னர் பிற்பகல் வேளைகளில் இரண்டு மூன்று பெண்கள் சேர்ந்துகொள்வார்கள். வீட்டின் வாயில்களில் உள்ள படிக்கட்டுக்களில் ஒருவருக்குப் பின் ஒருவராக ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒவ்வொருவர் அமர்ந்துகொள்வார்கள். முன்னே கீழேயிருப்பவரின் தலைமுடியை விரித்துப் பின்னேயிருப்பவர் வகிர்ந்தெடுத்து பேன் எடுப்பார்கள். படிக்கட்டுப்போல அமர்ந்துகொள்வதால் முன்னே இருப்பவரின் தலையை பின்னேயிருப்பவர் முழுமையாகப் பார்க்கமுடியும். இறுதிப் படியில் இருப்பவர் ஈற்றில் முதல் படிக்கு இடம்மாறி வருவார். அவரைக்கொண்டு பேன் எடுப்பித்தவர் இரண்டாம் படிக்கு வருவார். அந்த வேளைகளில் மூவரின் முகத்தையும் ஒரே தருணத்தில் பார்க்கக்கூடிய வகையில் முதலாவதாக இருப்பவரிடம் ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி இருக்கும். தனித்து தனக்குத்தானே பேன் எடுப்பவர்கள் முகம்பார்க்கும் கண்ணாடி ஒன்றும் ஏறத்தாழ ஓரடி நீளமும் அரை இஞ்சி அகலமுமுள்ள மரத்துண்டை பிசிரின்றி சீவி அழுத்தம்செய்து அதன் அரைவாசியை சீப்பின் பற்கள் போல அரையடி நீளத்துக்கு வெட்டி மீதிப்பகுதியை கைபிடிக்கும் பகுதியாக விட்டுச் செய்யப்பட்ட 'ஈர்கோலி"யும் வைத்திருப்பார்கள். இன்றைய பிளாஸ்டிக் உலகில் இருமருங்கும் பற்கள் வைக்கப்பட்ட பேன் சீப்பின் பிதாமகர் 'ஈர்கோலியே". தலைமுடிக் காட்டில் ஒழிந்திருக்கும் ஈர்களைக் கோலி எடுக்க, அது போன்ற சாதனம் அதன் பின் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லைப் போலும்! 

வீட்டில் உள்ள கண்ணாடியைக் காட்டிலும் 'கலைநேசன்" கடையிலிருந்த கண்ணாடி அந்தச் சிறுவயதில் எம்மை வியப்பிலாழ்த்திய அதிசயமாயிருந்தது. கடைக்கு வருபவர்களின் முகங்களை கச்சிதமாய் அது காட்டியிருந்தது. சிலவேளைகளில் அகங்களையும் காட்டியிருந்தது. கலைநேசன் போட்டுவாங்கும் கதைகளுக்கு பிரதிபலிக்கும் வாடிக்கையாளர்களின் முகங்கள் அவரது கண்ணாடியில் அகங்களைக் காட்டியதுமுண்டு!

கலைநேசன் தூய்மையின் வடிவமானவர். அழகான மெல்லிய தோற்றம். ஐந்தரையடி உயரம். எம்.ஐp.ஆர் கலர். அளந்து கத்தரிக்கப்பட்ட பால்வெள்ளைத் தலைமுடியும் மீசையும். என்றும் புதிதுபோல் இருக்கும் தூய்மையான சாரம். இடுப்பில் கட்டப்பட்ட அகலமான 'மேளகாரன் பெல்ற்". இடுப்புக்குமேலே முன்புறம் சிறிதாக மிதப்பொடுத்திருக்கும் 'கள்ளுவண்டி". நமக்குத் தூய்மையும் சீர்மையும் தந்த அழகுக் கலைஞர் அவர்.

கலைநேசனின் கடை பன்முகப்பட்ட மனிதர்களின் சங்கமம். பிரதான பாதையிலிருந்து மூன்று ஊர்களுக்குள் நுழையும் பாதைகள் சங்கமிக்கும் முச்சந்தியில்தான் அவரின் கடை. மூன்று ஊர்களிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து போவார்கள். திருவிழாவில் நடந்த சின்னமேளம் தொடக்கம் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தை முதல் பல்வேறு விடயங்களின் கருத்தாடல் களம் அது. கிரமமாக அவர் எடுக்கும் பத்திரிகைக்கு இருந்த கிராக்கி அதிகம். பிரதான பாதையால் போய்வருபவர்கள் கூட கலைநேசனின் கடையைக் கண்டதும் துவிச்சக்கர வண்டியிலிருந்து குதித்திறங்கிவந்து பத்திரிகையை ஒருமுறை தட்டிப்பார்த்துச் செல்வார்கள். காசுகொடுத்துப் பத்திரிகை வாங்கிப் படிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்குக் கடை ஒரு வாசிகசாலையாகவும் பணியாற்றியது.

மண்சுவர், கிடுகினால் வேயப்பட்ட கூரை. பனை மட்டைகளால் வரியப்பட்ட காற்றோட்டமுள்ள மூன்றுபக்கத் தட்டிகள். கிடுகினால் கட்டப்பட்ட முகப்பு வாயிலுக்குத் தட்டிக்கதவு. வாரந்தோறும் சாணத்தினால் மெழுகப்பட்ட பொலிவுகுன்றாத நிலம். ஏ.சீ. அறிமுகமாகாத காலத்துக் கிராமத்து ஏ.சீ. சலூன் அது. ஒரு சவரக்கத்தி, இரண்டு கத்தரிக்கோல், இரண்டு மூன்று சீப்புகள், ஒரு பெரிய கண்ணாடி, கண்ணாடிக்கு முன்னுள்ள ஒரு சோடிக் கதிரை-மேசை, வாடிக்கையாளர் அமரும் நீள வாங்கில், சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும் சவரக்கத்தி தீட்டும் தோல் வார், சவர்க்காரம் பூசும் ஒரு தூரிகை, இரண்டொரு மாற்றுத் துவாய்த் துண்டுகள், ஒரு நீர்விசிறி என்பவையே கலைநேசனின் கடையின் சொத்துக்கள். 

கலைநேசன் என்ற பெயர் வெகுஜனத்தன்மை பெற்றுவிட்டதால் அவரின் சொந்தப்பெயர் மறைந்துபோனது. இன்றுவரை யாருக்கும் அவரின் இயற்பெயர் தெரியாது. கலைநேசன் ஒரு சான்றிதழையும், அதனோடு இணைந்த வகையில் உருப்பெருப்பிக்கப்பட்ட ஒரு கறுப்புவெள்ளைப் புகைப்படத்தையும் பிறேம் போட்டு தனது கடையினுள்ளே சுவரில் மாட்டியிருந்தார். கடைக்குப் புதிதாக யாராவது வந்துவிட்டால் போதும் சான்றிதழுக்கும் புகைப்படத்துக்குமான வரலாற்றுப் பதிவை தவறாது விதந்துரைப்பார். 'நான் பன்னிரண்டு நாடகம் நடிச்சிருக்கிறன். எல்லாத்திலையும் கௌரவ வேசம் தான். மேஜர் சுந்தர்ராஜன் எண்டு எனக்கு ஒரு பட்டப்பெயர் ஊரிலை. நாடகப் பாட்டுகள் பாடுவன். ஈழத்துத் தியாகராஜ பகவதர் எண்டு என்னைச் சொல்லுவினம் ஊராக்கள். நான் பாடுற கண்ணதாசன் எழுதின சினிமாப் பாட்டுகளைக் கேக்கிறவை சௌந்தர்ராஜன்கூட உப்பிடிப் பாடேலாது எண்டு புழுகுவினம். ஒருமுறை எங்கடை பகுதிக்கு எலக்சன் பிரச்சாரத்துக்கு தென்பகுதியிலையிருந்து எல்.எஸ்.எஸ்.பி.க்காரர் வந்தபோது அவையின்ரை கூட்டத்திலைதான் எனக்கு இந்தப் பட்டத்தை ஊராக்கள் அவையளைக்கொண்டு தந்தவை. அந்தப் போட்டேவிலை நிக்கிறவர் பெரிய அரசியல்வாதி தெரியுமோ"..... என்று சொல்லும் தருணங்களில் அவர் முகத்தில் பெருமை பொங்குவதை அவரின் கடையிலுள்ள கண்ணாடி நன்றாகவே காட்டும். அந்தச் சான்றிதழ்தான் அவரது பெயர் 'ஞானலிங்கம்" என்பதற்கு வெளித்தெரியும் ஒரே ஆதாரமாகக் கடைச்சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது.

கடையிலே வேலை குறைந்த வேளைகளில் 'கலைநேசன் ஞானலிங்கத்தார்" பத்திரிகையுள் ஆழமாக உறைந்திருப்பார். மாலையில் கடையைச் சாத்திச் செல்வதற்கிடையில் பத்திரிகை முழுவதையும் படித்து முடித்துவிடுவார். சில வேளைகளில் கையில் ஏதாவது புத்தகங்களை வைத்துப் படித்தவாறிருப்பார். மதியச் சாப்பாட்டுக்குப் பின்னர் வாடிக்கையாளர் குறைந்திருக்கும் வேளைகளில் கடையிலிருந்து மெல்லி பாட்டொலி காற்றில் மிதந்துவரும். அயலிலுள்ள வீட்டுக்காரர்கள் இலங்கை வானொலியின் 'இன்றைய நேயர்" நிகழ்ச்சி நேரத்துக்காக் காத்திருப்பதைப்போல் காத்திருப்பர். 'பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா".... என்று பாடி சௌந்தரராஜனைத் தோற்கடிக்கும் முயற்சியில் அவரை ஊக்குவிப்பது மதியத்துக்கு முன்னர் தொழில் முடிந்த கையோடு இயனத்தைக் கழற்றாமலே வந்துபோகும் இராசு என்று அழைக்கப்படும் இராசேந்திரம் தான் என்பதும் பலருக்கும் தெரிந்தும் தெரியாதது போல இருக்கும் ஒரு வாலாயமான நிகழ்வு.

சிறுவர்களுக்கு சினேகமான சலூன் என்பதால் பாடசாலை நாட்களுக்குப் பின்னான வார இறுதி நாட்களில் கலைநேசனின் கடை இப்போதுள்ள புலமைப்பரிசில் பிரத்தியேக வகுப்புக்களைப்போல சிறுவர்களாலும் பெற்றோர்களாலும் நிறைந்திருக்கும். 'பிள்ளைநேயம்" மிக்கவராக ஞானலிங்கத்தார் தொழில்செய்வார். கத்தரிக்கோலைக் கண்டவுடன் வீரிட்டுக் கத்தும் பிள்ளைகள், கண்ணாடிக்கு முன்னே இருந்தவுடன் குறும்புத்தனம் செய்யும் 'கு~p" நிலைக்கு வந்துவிடும் பிள்ளைகள், சவரக்கத்தியால் கன்னவோரம் சீர்செய்யும் போது ஏற்படும் கூச்ச உணர்வினால் கதிரையில் இருந்தபடியே சிறுநீர் விட்டுவிடும் பிள்ளைகள் என்று தனியாள் வேறுபாடுகளைக் கொண்ட பிள்ளைகளை வசீகரிக்க அவரிடம் பல்வேறு நுட்பங்களும் அணுகுமுறைகளும் கைவசமிருந்தன. 

சிறுவர் பாடல்களையும், சிறுவர்களுக்கான களிப்பூட்டும் கதைகளையும் ஏராளமாக அறிந்துவைத்திருந்தார். சிறுவர்களுக்கு முடிவெட்டும் தருணங்களில் கண்ணாடியில் பிள்ளைகள் தன் முகபாவத்தைக் காணுமாறு நடிப்புடன் கூடிய கதைகளைச் சொல்லியும் பாட்டுக்களைப் பாடியும் மகிழ்வூட்டியவாறு தன் தொழிலைச் செய்வார். சிறுவர்கள் வியப்பூட்டும் உலகில் சஞ்சரித்துப்போவர்.

எதுகை, மோனையுடன் கத்தரிக்கோலினால் ஒலியெழுப்பித் தாளக்கட்டுக்கள் சேர்த்து, வாயினால் மிருதங்கம் வாசித்து, அவர் பாடும் பாடல்கள் சில எங்கேயும் கேட்டிராத புதியனவாயிருக்கும். பாடசாலையில் ஆரம்பவகுப்பு ஆசிரியைகள்கூடச் சொல்லித்தராத பாடல்கள் அவை. பின்னாளில் மேடையேற்றப்பட்ட தாளலய நாடகங்களில் வருவதைப்போன்ற பாடல்களைப் பாடுவார். அவற்றைக்கேட்டுப் பிள்ளைகளின் கண்கள் வியப்பினால் விரியும். அவர் பாடிக்காட்டிய பாடல்களில் ஒன்று,

'நண்டு நண்டு நண்டு 

நாகரீக நண்டு

நண்டு திண்ட நாகம்மாக்கு 

ரண்டு சொண்டு உண்டு" 

என்று எதுகை, மோனை, சந்தம் வெளிப்பட அமைந்து சிறுவர்களைச் சிரிக்கவைத்தது. பின்னாளில் அந்தச் சிறுவர்கள் பெரியவர்களானபோதுதான் தெரியும் அவரது மனைவியின் பெயர் நாகம்மா என்பது. ஏற்றநீர்ப் பாட்டின் இசை, கோற்றறொடியார் குக்குவெனக் கொஞ்சும் மொழி, சுண்ணமிடிப்பாரின் சுவை மிகுந்த பாட்டு என்பவற்றுடன் கலைநேசன் ஞானலிங்கத்தாரின் கத்தரிக்கோல் எழுப்பும் தாளக்கட்டையும் சேர்த்துக்கொள்ளலாம். 

                                                                                                       உதயன்-சஞ்சீவி, 01.02.2020.


Comments

Popular posts from this blog

'ஊருக்கை ஒருகதை" - 'யானை திரத்தின கூளைக் கணபதி"

ஊருக்கை ஒருகதை - சவம் காத்த சண்டியன் சண்முகத்தான்