ஊருக்கை ஒருகதை - சவம் காத்த சண்டியன் சண்முகத்தான்

யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் 'தீம்புனல்" வாரந்த பத்திரிகையில் 'ஊருக்கை ஒருகதை" எனும் தலைப்பில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் ஊர்க்கதைகளில் 01.05.2021 அன்றைய நாளில் வெளியான 'சவம் காத்த சண்டியன் சண்முகத்தான்".  


சவம் காத்த சண்டியன் சண்முகத்தான்


முந்தியெல்லாம் ஊருக்குள்ளை ஒரு செத்தவீடு நடந்தால் போதும் செத்தவீட்டு வேலைவெட்டியளைச் செய்யிறதுக்கு இளவட்டங்கள் முண்டியடித்து வந்து நிக்குங்கள். தோரணம் கட்டிறது துவக்கம் சவம் எரிக்கிறது வரைக்கும் எல்லா வேலையளையும் பொறுப்பெடுக்க இளம் பொடியள் வந்து நிற்பாங்கள். இண்டைக்கு அது குறைஞ்சுபோச்சுத்தான். அப்ப எண்டாலும் சரி இப்ப எண்டாலும்  சரி அந்த வேலையளுக்குப் பின்னாலை ஒரு 'முசுப்பாத்தியும்" இருக்கெண்டு எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்தானே! 

இண்டைக்கு அந்த 'முசுப்பாத்தியள்" அளவுக்கு மிஞ்சிப்போச்சு. கோர்வை கோர்வையா வெடி கொழுத்திறது 'கேஸ்" கணக்கிலை சோடா உடைக்கிறது 'பாண்ட்" வாத்தியம் பிடிச்சு முழங்கித்தள்ளிறது எண்டு கனக்க இருக்கு. அதிலை தவிர்கேலாத ஒண்டுதான் சுடலைக்கு 'பரல்" அனுப்பிறது! பொதுவாக் கவனிச்சுப் பார்த்தியளேயெண்டால் தெரியும். சுடலை இருக்கிற இடத்துக்குப் பக்கத்திலை ஒரு கள்ளுத் தவறணையும் இருந்தே தீரும். அது ஏன் அப்பிடி? எண்டு கேட்டதுக்கு 'தவறணைக்குத் தவறாமல் போறவை கெதியா சுடலைக்கு போவினம் எண்ட வாழ்க்கைத் தத்துவத்தை விளங்கவைக்காத்தான்" எண்டு பதில் சொல்லினம். தத்துவம் எப்பிடியிருந்தாலும் சுடலைக்குப் பக்கத்திலை தவறணை இருக்கிறது 'பரல்" அனுப்பச் சுகமானது தானே எண்டு வைச்சுக்கொள்ளலாம். இன்னுமொரு தத்துவம் இருக்குதாம்! தவறணையும் சுடலையும் தானாம் 'சமரசம் உலாவிற" இடம்! அதுதானாம் பக்கத்திலை இருக்கு.

சமரசம் உலாவிற அந்த இரண்டு இடத்தோடையும் சம்மந்தப்பட்ட ஒராள்தான் 'சண்டியன் சண்முகத்தான்". அந்த நேரத்திலை சவம் எரிக்கிறதிலை அவன்தான் மெயின் ஆள். சவம் எரிக்கிறது எண்டால் அவனை 'வெட்டியான்" எண்டு நினைச்சிடக்கூடாது. ஊருக்குள்ளை சாகிற எல்லாரின்ரை சவத்தையும் எரிக்கமாட்டான். தனக்கு மனசுக்கு பிடிச்சவையின்ரை சவத்தைத்தான் எரிப்பான். அவனுக்கு மனசுக்குப் பிடிச்சவை எண்டால் அவைக்கு சில 'குவாலிட்டி" இருக்கவேணும்! செத்தவன் பணக்காரனா இருக்கக்கூடாது! புகழுக்காய் பல்லிளிக்கிறவனா இருக்கக்கூடாது! மற்றவனை ஏமாத்துறவனா இருக்கக்கூடாது! எண்டெல்லாம் ஏராளம் குவாலிட்டி. இந்தக் குவாலிட்டி எல்லாம் பாத்து சவத்தை எரிக்கிற வழக்கத்துக்கு சண்டியன் சண்முகத்தான் வந்ததுக்கு பின்னாலை ஒரு கதையிருக்கு. அந்தக் கதைக்குப் பிறகுதான் சண்முகத்தான் எண்ட அவரின்ரை பேரோடை 'சண்டியன்" ஒட்டிக்கொண்டது. ஊரிலை அவரை 'சவம் காத்த சண்டியன் சண்முகத்தான்" எண்டும் சொல்லுவினம்.

சண்முகத்தாரின்ரை பேர்த்தியார் கிழவி இடியப்பம் சாப்பிட்டுக்கொண்டு இருந்த நேரத்திலை இடியப்பக் குந்து புரைக்கேறி மூச்சடைச்சுச் செத்துப்போச்சு. 'ஊராரறிய சிறப்பா வாழ்ந்து முடிச்ச கிழவி. பாடைகட்டிச் சுமக்கிறது போதாது. தண்டிகை வண்டிலிலைதான் கொண்டுபோக வேணும். பறைமேளமும் பிடிக்க வேணும் எண்டு முடிவெடுத்தாச்சு. எவன் மறிக்கிறானெண்டு ஒருக்கால் பாக்கிறன்" எண்டு சண்முகத்தார் தன்னுடைய நண்பர்களை பிடிச்சு மாட்டு வண்டில் ஒண்டை பூ வேலைப்பாடுகளைச் செய்து அலங்காரம் பண்ணி தண்டிகை வண்டிலாக்கி நுகத்தடியை கழற்றிவிட்டு துலாவிலை பிடிச்சு இழுத்துக் கொண்டு போறதுக்கேத்தமாதிரி செய்து முடிச்சார். அந்த ஊரிலையே முதல் முதலிலை தண்டிகை வண்டிலிலை போனது சண்முகத்தாரின்ரை பேர்த்தியின்ரை சவம்தான். பறைமேளமும் முதல் முதல் அவவின்ரை சாவுக்குத்தான் பிடிச்சவை. பறைமேளத்தோடை தண்டிகை வண்டிலிலை கிழவியை கொண்டுபேற வழியிலைதான் சண்முகத்தார் திடீரெண்டு சொன்னவர் கிழவியின்ரை சவத்தை 'வேம்படிவெட்டை" சுடலையிலைதான் எரிக்கப்போயினமெண்டு. சினேகிதங்களோடை சேந்து சண்முத்தார் எல்லாத்தையும் பிளான் பண்ணிப்போட்டார். 'வேம்படிவெட்டைச் சுடலையிலை விறகெல்லாம் அடுக்கியாச்சு. பக்கத்திலை நல்ல சுடலை இருக்க ஏன் நாங்கள் கண்ட இடத்துக்கும் அலைய வேணும்? இண்டையிலையிருந்து எங்கடை ஊரிலை சாகிற எல்லாரையும் வேம்படிவெட்டைச் சுடலையிலைதான் எரிக்கிறது. ஆர் மறிக்கினம் எண்டு நானும் பாக்கிறன். ஆராவது மறிப்பாங்களேயெண்டால் கையக்காலை எடுக்கிறன் பார்" எண்டு சுடலை வேலைக்காக கையிலை கொண்டுபோன கத்தியை தூக்கிக் சுழட்டிக்கொண்டு போனவர்.

காடுபோலை ரோமம் அடர்ந்து கிடந்த பரந்த நெஞ்சுள்ள உடம்பு அடித்தொடை தெரிய உசத்தி கட்டின சண்டிக்கட்டு வேட்டி அகட்டிவைச்சு பாய்ஞ்சு நடக்கிற ஒட்டகக் கால் வெடிமுழக்கம் பறை முழக்கம் எல்லாஞ் சேர்ந்து சாதாரண சண்முத்தாரை சண்டியன் சண்முகத்தார் ஆக்கியிருந்துது. சண்முகத்தார் அண்டு வேட்டைக்குப்போற சாமியைப்போல பவனி காட்டினார். சண்முகத்தாரின்ரை அந்தப் பவிசை அதுக்கு முன்னம் ஊரிலை ஆரும் கண்டதில்லை. சண்முகத்தாரின்ரை பேர்த்திக்கிழவியின்ரை சவம் வேம்படிவெட்டைச் சுடலைக்கு போகுதாம் எண்ட கதை எல்லா இடமும் 'வைரலானது"!

சண்முகத்தார் தன்னுடைய சினேகிதங்களை ஆயத்தப்படுத்தி வைச்சிருந்தார். சுடலையுக்கு கிட்டை போகப்போக திகில் படம் பார்க்கிற உசார் எல்லாருக்கும். எல்லாரும் விரும்பியிருந்த வேலையை சண்முகத்தார் செய்துமுடிக்கப்போறார் எண்ட தவிப்பு அவைக்கு!

கிழவியின்ரை சவத்தை சுடலையுக்கை கொண்டுபோய்இ அடுக்கியிருந்த விறகிலை வைச்சுஇ வாய்க்கரிசி போடத்துவங்கிற நேரம் பத்து பன்னிரண்டுபேர் வரையிலை வந்து அந்தச் சுடலையிலை சவத்தை எரிக்க கூடாது எண்டு அட்டகாசம் பண்ணிச்சினம். வாய்நிறை தூசணங்களும் கைநிறைய கொட்டன் கத்திகளும். சண்முகத்தார் அவையை எதிர்பாத்துக் காத்துக்கொண்டு நிண்டவரைப்போலை கத்தியும் கையுமாக முன்ணோக்கிப் போனார். அவருக்குப் பின்னாலை இருவது இருவத்தைஞ்சு பொடியங்கள். எல்லாரும் சண்முகத்தாரின்ரை சினேகிதங்கள். வெளியிடத்திலை இருந்து வந்த புதுப் பொடியளும் நிண்டினம். எல்லாற்ரை கையிலும் கத்தியள்இ இரும்புக் கம்பியள்இ பொல்லுகள் கிடந்துது. எல்லாம் பிளான் பண்ணித்தான் நடக்கிதெண்டு பிறகுதான் தெரிஞ்சுது. 

சவம் எரிக்கிறதை மறிக்க வந்தவை மெள்ள மெள்ள பின்வாங்க வெளிக்கிட்டினம். பொலிசைக் கொண்டுவந்து எல்லாரையும் உள்ளுக்கை தூக்கி போடுறம் எண்டும் சொல்லிக்கொண்டு போச்சினம். பெரிய பிரச்சினை வரப்போகுது எண்டு சவத்தோடை வந்த ஊராக்கள் முழிசத் தொடங்கிவிட்டினம். கிழவிக்கு வாய்க்கரிசி போடற வேலை குறையிலை நிண்டிட்டுது. சண்முகத்தாரும் அவரின்ரை சினேகிதங்களும் சுடலை வாசலிலை எதுக்கும் தயாரெண்டுதான் நிண்டினம். உள்ளுக்கை வாய்க்கரிசி போட்டுஇ கொள்ளிக்குடம் உடைச்சுஇ கொள்ளிவைக்கிற வேலை எல்லாம் நடந்தபடியிருந்துது. 

கொள்ளிவைச்ச சண்முகத்தாரின்ரை பெரியதகப்பன் சுடலையை விட்டு வெளியிலை போக மெதுமெதுவாய் வந்த சனங்கள் திரும்பிப் போக தொடங்கிச்சுதுகள். சனம் கலைஞ்சு போன பிறகு சண்முகத்தாரும் சினேகிதங்களும் கிழவியின்ரை சவத்தை எரிக்கிறதிலை மும்முரமா நிண்டினம். கத்தியளும் கம்பி பொல்லுகளும் கையளுக்கை தான் கிடந்துது. 

சுடலைக்குப் பக்கத்திலை இருந்த தவறணையிலிருந்து ஒரு 'பரல்" வந்து சேர்ந்துது. முளாசி எரியிற நெருப்ப வெக்கைக்கு 'அது" அவைக்கு தாகம் தீர்க்கிற கங்கை போலிருந்துது. 

அண்டைக்குப் பிறகு சண்முத்தாரின்ரை ஊரிலையிருந்து அந்தச் சுடலைக்கு வாற சவத்தை எரிக்கக்கூடாதெண்டு ஆரும் சொல்லுறதில்லையாம்! 


Comments

Popular posts from this blog

'ஊருக்கை ஒருகதை" - 'யானை திரத்தின கூளைக் கணபதி"